நான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?

இயக்குனர் ரஞ்சித், பெண் வெறுப்பென்ற வரலாற்று இழிவிலிருந்து ரஜினியை விடுவித்திருக்கிறார் என்று தெரியவரும்போது கபாலியைப் பொருட்படுத்தலாம்.

நான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?

லீனா மணிமேகலை

"இன்னும் நான்கு நிமிடங்களில் உங்கள் ஓலா டாக்ஸி உங்களை பிக் அப் செய்யும்" என்று என் மொபைலின் திரை மின்னியது. வீட்டு முகவரி சொல்வதற்காக டிரைவருக்கு போன் செய்தேன். ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது! அடக்கம் வேணும்! ஆத்திரப்படக்கூடாது! அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது! கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது! பயபக்தியா இருக்கனும்! இப்படி பஜாரித்தனம் பண்ணக்கூடாது! மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்!’ என்று படையப்பா ரஜினியின் கர்ஜனை டிரைவரின் போனில் ரிங் டோனாக அடித்து ஓய்ந்தது. டிரைவர் போன் எடுக்கவில்லை. ஒருவேளை நான் அவரின் ரிங்டோனை முழுமையாக கேட்க வேண்டுமென்பதற்காகவே போனை எடுக்கவில்லையோ என்று கூட தோன்றியது. சில நிமிடங்களில், "உங்கள் ஓலா குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே உங்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறது" என்று மீண்டும் ஒரு செய்தி. டாக்சி பயணத்தில் ஸ்பீக்கரில் வைக்கப்பட்டிருந்த டிரைவரின் போனுக்கு அழைப்பு வந்தபோதெல்லாம், ரஜினி மீண்டும் மீண்டும் கர்ஜித்துக் கொண்டே இருந்தார். யாரிடம் கோபப் பட்டாலும் டாக்சி டிரைவர்களிடம் கோபப் படக்கூடாது என்பது என் பல வருடப் பயிற்சியாதலால், பொறுமையைக் கடைப்பிடித்தேன். "என்னண்ணே, உங்க தலைவர் படம் ரிலீஸ் போலிருக்கு" என்று மெதுவாக கேட்டேன். "மூவாயிரம் ரூபா மேடம்! முதல் ஷோ டிக்கெட் வாங்கிட்டம்ல" என்றவரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.


கபாலி ரிலீஸ் தேதி அறிவித்ததிலிருந்தே அதிகபட்சம் 120 ரூபாய்க்கு விற்கப் படும் டிக்கெட்டுகள் 5000 வரை சட்டத்துக்கு விரோதமாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதல் ஷோ, முதல் டிக்கெட் சாதனையை எட்ட கூலித் தொழிலாளி முதல் இன்டெலக்சுவல்கள் வரை தமிழ் நாட்டில் குட்டிக் காரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஐடி கம்பெனிகள் லட்ச ருபாய் செக்குகள் கொடுத்து தங்கள் பணியாளர்களுக்கு கபாலி ஷோக்களை க்ரூப் புக்கிங் செய்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதி மன்றம் கூட ஓவர் டைம் வேலை செய்து பைரஸி செய்யக்கூடிய வாய்ப்புள்ள தளங்களை முடக்குகிறது. கபாலி பெயரில் விமானம் விடுவதில் தொடங்கி, ஆப் டவுன்லோடு காய்ச்சல் , முத்தூட் நகை அடமானத்தில் டிஸ்கவுண்ட், பண்பலை ரேடியோ ஜாக்கிகளின் எஸ்.எம்.எஸ் வழிப்பறி என்று "கபாலி கொள்ளை" தான் தமிழ் நாட்டின் இன்றைய ஹைலைட். கபாலியில், ரஜினிக்கு ஏழை மக்களைக் காப்பாற்றும் நல்ல தாதா மாதிரியான ஒரு கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல். "கலகம் செய்து ஆண்டையின் கதையை முடிப்பான்" என்ற கபாலி பட பாடல் வரிகள் இப்படியான கலகங்களை தான் குறிப்பால் உணர்த்துகிறது போலும். நடிகர்களை கடவுளாகப் போற்றும் விசிலடிச்சான் குஞ்சுகள் நிறைந்த தேசம் என்ற பெருமை தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி உண்டு தான். மக்களை சுரண்டி உருவாக்கப்படும் இந்த சூப்பர் ஸ்டார் பிம்பங்களால் சினிமாவுக்கும் சமூகத்திற்கும் ஏதாவது கிஞ்சித்தும் பயன் உண்டா என்பது தான் இன்று நம்முன் இருக்கும் 200 கோடி(கபாலியின் மொத்த வியாபாரம்) கேள்வி.

"நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு.. 25 வருஷத்துக்கு முன்னால எப்புடி போனாரோ அப்டியே திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு..." என்ற கபாலியின் ட்ரெயிலர் தமிழ் நாட்டு வீடுகளில் சில மாதங்களாக ஆடோ-லூப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. சரி, ரஜினி 25 வருஷமாக என்ன செய்தார். 'கை கொடுக்கும் கை' திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்படும் கண்பார்வையற்ற பெண்ணை பெரிய மனதுடன் மன்னித்து "வாழ்க்கை" கொடுப்பார். 'அண்ணாமலை'யில் நிர்வாணமாக ஒரு பெண்ணை பார்த்துவிட்ட குற்றத்திற்காகவே அவரை மணந்துக்கொள்வார். 'மன்னனி'ல் கதாநாயகியை கன்னத்தில் ஓங்கியறைந்து "பொம்பள பொம்பளையாய் இருக்கணும்" என்று பஞ்ச் டயலாக் பேசுவார். 'வீரா'வில் தன் காதலை தெரிவிப்பதற்காக நாயகியின் ரவிக்கைக்குள் மீனை நழுவ விடுவார். 'கொடி பறக்குது' படத்தில் தன் முகத்தில் இருக்கும் ஐஸ் க்ரீமை நக்கச் சொல்லி பெண்ணுக்கு பாடம் புகட்டுவார். 'எஜமானில்' ரஜினியின் "ஆண்மை"யை நிரூபிக்க ஆளாளுக்கு அவர் தன்னிடம் உறவு கொண்டதாக சத்தியம் செய்வார்கள். 'படையப்பா'வில் "அதிகமா ஆசைப்படற ஆம்பிளையும் அதிகமா ஆத்திரப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது" என்று பேசி ஆளுமை மிக்க நீலாம்பரியை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார். 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் தன்னை அசட்டை செய்யும் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தான் யார் என நிரூபிப்பார். எந்திரன், லிங்கா, மாயா என்று நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும் டூயட் பாடிய ரஜினி, பொம்பளைகளுக்கான போதனைகளை மட்டும் நிறுத்திக் கொள்ளவே வில்லை. இந்தப் படங்களை எழுதி இயக்குபவர்களை கேள்வி கேட்காமல், ஒரு நடிகனை குறை சொல்வது நியாயமே இல்லை என்று சிலர் முணுமுணுக்க கூடும். கதாநாயக பிம்பங்களின் முன் பாலச்சந்தர்களும், பாரதிராஜாக்களுமே பல சமயங்களில் வீழ்ந்துப் போனதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டும். ரஜினியின் பிம்ப மயக்கத்தில் ரஜினியே சிக்கி சின்னாபின்னமாகி விட்டிருக்கும் நிலையில், யாரும் என்ன உருப்படியாக செய்துவிட முடியும். ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பளையாக இருக்கவும் வகுப்புகள் தான் எடுக்க முடியும்.

திரைப்படங்களுக்கு தடை கேட்பவர்கள் சாதாரணமாக "எங்கள் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள்", "எங்களை அவமதித்து விட்டார்கள்" என்ற காரணங்களை முன்வைப்பார்கள். அந்த வகையில் மக்கள்தொகையில் சரிபாதி எண்ணிக்கையில் வாழும் பெண்களை மிக மோசமாக அவமதிப்பதின் அடிப்படையில் தமிழில் வெளிவரும் பெரும்பாலான படங்களை, அதுவும் ரஜினியின் படங்களை தடை கோரலாம் தான் . ஆனால் தடைகள் மூலமாக எதையும் மாற்றிவிட முடியாது என்பதை ஒரு படைப்பாளியாகவும் வாசகராகவும் மிக காத்திரமாக நம்பும் ஆள் நான். விமர்சனங்கள் மூலமாகவும், தொடர்ந்த விவாதங்கள் மூலமாகவும் பண்பு மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்புவதும் பேசுவதும் கூட, குடிமை சமூகமாக மாறுவதற்கு மூர்க்கமாக மறுக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு ஆகச்சிறந்த ஜோக்காக கருதப்படலாம்.

ரஜினி படம் வரும் போதெல்லாம் எனக்கிருக்கும் விசாரம் ஒன்று தான். பெண்ணாகப் பிறந்துவிட்ட நான் ஏன், என் சொந்தக் காசை செலவழித்து டிக்கெட் வாங்கி ரஜினி படத்தைப் பார்த்து அவர் என் முகத்தில் அவ்வளவு அதிகாரப்பூர்வமாக காரி உமிழ்வதை விருப்பத்துடன் வாங்கிக் கொள்ள வேண்டும்? இயக்குனர் ரஞ்சித், பெண் வெறுப்பென்ற வரலாற்று இழிவிலிருந்து ரஜினியை விடுவித்திருக்கிறார் என்று தெரியவரும்போது கபாலியைப் பொருட்படுத்தலாம்.